தொலைந்துபோன நாட்கள்
யாரும் திருப்பித்தர முடியாவிட்டாலும்
திரும்பத் திரும்ப ஞாபகத்தில் வந்துபோகும்
நான் ஏறிய ஏணியில் நெழிந்த
பாம்புகளாக
நான் தாண்டிய நெருப்பாற்றின்
அக்கினி வெப்பமாக
நான் சுமந்த சுமையின்
தோற்பட்டை காயமாக
உடலைத் தீண்டிய போரின்
வடுக்கலாக
உடலில் மிஞ்சிய வலுவாக
தொடரும் என் தோல்விகளின் காரணியாக
இருக்கும் என் வெற்றியின் ஏணியாக
எல்லாம் அந்த தொலைந்துபோன நாட்கள்தான்
பள்ளிக் காலத்தை தின்ற போரின் நாட்கள்
முள்ளில் சிக்குண்ட இளமைக் காலங்கள்
புதைந்து கிடக்கும் புத்தகப்பைக்குள்
புதைந்துபோன கனவுகள்
சிதைந்து போன சுவருக்குள்ளே
சிதைக்கப்பட்ட வசந்தங்கள்
முளைக்கத் துடிக்கும்
விதைக்குள்ளே பயத்தின் அதிர்ச்சிகள்
நினைவுகளைத் தவிர மிச்சமில்லாமல்
நிர்மூலமாக்கப்பட்ட அடையாளங்கள்
அழிவைக்கூட நினைத்துப் பார்க்க முடியாத வெட்கம்
நினைவுகளை காட்சிபடுத்த முடியாத தேசம்
சரிவில் இருந்து கற்காத இனவாத கபடம்
சாவில் சுகம் காணும் அதிகாரமயக்கம்
இந்த சகதிக்குள் வாழும் சாதனைப் பயணம்
இதை சந்தித்து தொலைத்த காலம்
நினைவுகளில் பதிந்த நெருப்பின் காயம்
வட்டக்கச்சி
வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக